இந்தி திணிப்பு – இந்தி பேசும் மக்களுக்கே லாபம்; இந்தியாவிற்கு பெரும் நஷ்டம்…

ஒரே மொழி கொண்ட நாடுகள் டஜன் கணக்கில் இருக்கின்றன. அது தனிக் கதை.

ஆனால், ஒரே மொழியை திணிக்க முயன்று நாசமாய்ப்போன நாடுகள் பல இருக்கின்றன. அந்த வரிசையில் இந்தியா வந்துவிடக் கூடாது.

அண்டை நாடான பாகிஸ்தானே அதற்கு உதாரணம். இந்தியாவிடம் இருந்து பிரிந்துபோன பாகிஸ்தாணில் தேசிய மொழியாக உருது தான் இருக்க வேண்டும் என்று முகமது அலி ஜின்னா சொன்னார்.

ஜின்னாவின் இந்த ஒற்றை மொழிக் கொள்கைதான் பிற்காலத்தில் பாகிஸ்தான் இரண்டாக பிரிந்து வங்க மொழியை கொண்ட ‘வங்கதேசம்’ என்ற தனி நாடு உருவாக காரணமாக இருந்தது.

உருது தேசிய மொழியாக இருக்க வேண்டும் என்று சொன்னது எப்படிப்பட்ட பாதிப்பை ஏற்படுத்தியதோ அதை போன்ற ஒரு பேராபத்தை “இந்தியாவில் இந்தி தேசிய மொழி” என்பது ஏற்படுத்தும்.

பல நாடுகள் ஒன்றிணைந்து ஒரு நாடாக உருவான இந்தியா போன்ற ஒரு துணைக் கண்டத்தில் ஒரு பிரிவினர் மட்டும் பேசும் இந்தி மொழியை பாஜக தூக்கி பிடிப்பது எதற்காக?

இந்தி திணிப்புக்கு எதிராக தென் மாநிலங்கள் குறிப்பாக தமிழகத்தில் இருந்து கிளம்பிய போராட்ட வரலாறு பாஜகவுக்கு தெரியவில்லையா?

ஆட்சி அதிகாரம் தன் கையில் இருப்பதால் முதலில் இந்தியை திணித்து பிறகு அதன்மூலம் சமஸ்கிருதத்தையும் திணித்துவிடலாம் என்று ஆர்.எஸ்.எஸ்-சின் கொள்கையை நிறைவேற்ற பார்க்கிறதா பாஜக?

அதைப்பற்றி தான் இந்த காணொளியில் பார்க்க போகிறோம்…

அதிகமான மக்கள் பேசுகிறார்கள் என்பதால் இந்தி தான் இந்தியாவின் ஆட்சி மொழியாக இருக்க வேண்டுமா? அப்படிப் பார்த்தால் இந்தியாவில் மயில்களை விட காக்கைகளின் எண்ணிக்கைதான் அதிகம். ஆனால் நாம் தேசிய பறவையாக மயிலை தான் கொண்டிருக்கிறோம் தவிர காக்கைகளை அல்ல என்ற நேருவை வைத்துக் கொண்டே நாடாளுமன்றத்தில் அண்ணா சொன்னது நம் அனைவருக்கும் தெரியும்.

இப்போ காக்காவை விடவும் கொசு தான் அதிகம். அதனால் அதை தேசிய பறவை ஆக்கிவிடலாமா? முடியாதல்லவா?

உண்மையிலேயே இந்தி மொழியை தான் அதிகமானோர் பேசுகின்றனரா? இல்லை. நாட்டில் இந்தி பேசுபவர்கள் 43% பேர். அதில் வெறும் 26% பேர் மட்டுமே இந்தியை தாய்மொழியாக கொண்டுள்ளனர்.

ராஜஸ்தான், குஜராத்தி, பாலி போன்ற பல மொழிகளின் கலப்புதான் இந்தி. அதுவும் வெறும் 400 வருடங்கள் மட்டுமே பழமையானது. இந்தி கலப்பு மொழிகளை பேசுவோரையும் சேர்த்து தான் இந்த 43%.

இந்தியை தேசிய மொழியாக பகிரங்கமாக அறிவிக்கவே பாஜக-வும் ஆர்எஸ்எஸ்-ம் ஆழம் பார்க்கும் ஒரு நிகழ்வாகவே அமித்ஷாவின் இந்த பேச்சு உள்ளது.

2024-ல் இந்தி எப்போதும் இல்லாத ஒரு உச்சத்தில் இருக்கும் என்ற அமித்ஷாவின் பேச்சு அதற்கு சான்று. இதுக்கு பின்னால் ஒரு பெரிய திட்டம் இருப்பதை நாம் உணரலாம்.

அமித்ஷாவின் ஒற்றை மொழிக் கொள்கை பேச்சு தாய் மொழியை நேசிப்பவர்களுக்கு எதிராக அறிவிக்கப்பட்ட போராட்டம்.
இந்த நேரத்தில் உலகத்தோடு உரையாட ஆங்கிலம் இருக்கிறது; அப்படியானால் இந்தியாவுக்குள் மட்டும் உரையாட தமிழர்கள் இந்தியை ஏன் கற்க வேண்டும்? பெரிய நாய் செல்ல பெரிய கதவும், சிறிய நாய் செல்ல சிறிய கதவும் தேவையா? பெரிய கதவின் வழியே சிறிய நாயும் செல்லட்டும் என்று இந்தி திணிப்புக்கு எதிராக அண்ணா சொன்னதுதான் நியாபகம் வருகிறது.

பாஜகவினரிடம் அமித்ஷாவின் இந்த பேச்சு பற்றி கேட்டால் உடனே ப.சிதம்பரமும் உள்துறை அமைச்சராக இருந்தபோது இந்தியில் பேசி இந்தியை நாடு முழுவதும் கொண்டு செல்ல வேண்டும் என்று சொன்னாரே என்றும் அவங்க அப்படி சொன்னாங்களே! இவங்க இப்படி சொன்னாங்களே! என்று கூறி தங்களது கருத்தை நியாயப்படுத்த பார்க்கின்றனர்.

பாஜகவினருக்கு ஒரு விஷயம் மட்டும் எப்போதும் புரியாதுபோல. ஜவஹர்லால் நேரு, ராஜாஜி, ப.சிதம்பரம், நரசிம்ம ரெட்டி என எப்போதெல்லாம் இந்தியை திணிக்க யார் முயற்சித்தாலும் அப்போதெல்லாம் அவர்கள் மக்களின் எதிர்ப்பையே சம்பாதிக்கின்றனர்.

உலகமெல்லாம் சுற்றிய எனக்கு இந்தி தெரியாததால்தான் என் வாட்ச்மேன் கிட்ட பேசமுடியல என்று வருத்தப்பட்டார் ஒரு நடிகர். அவருக்கு இந்தி தெரியாமல் இருந்ததும் அவர் உலகமெல்லாம் சுற்றினார். இந்தி மட்டுமே தெரிந்த அவரது வாட்ச் மேன் அவர் வீட்டு வாசலில் காவல் காக்கிறார் என்பது புரியமாட்டேங்குது.

இன்னொருத்தர், தமிழ்நாட்டில் இருந்துவிட்டு சமீபத்தில் ஆளுநராக பதவி பெற்றார். அவர், எனக்கு இந்தி தெரியாததால்தான் என்னால் உயர் பதவிகளை அடைய முடியவில்லை என்று சொன்னார். அவருக்கு இந்தி தெரியாது, தமிழ், ஆங்கிலம் தெரிந்ததால்தான் டாக்டராக முடிந்தது. இப்போது அவர் ஆளுநர் ஆவதற்கு கூட இந்தி தெரியாதது ஒரு தடையாக இருக்கவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

சமஸ்கிருதத்தை விடவும் தொன்மையான மொழி தமிழ் என பிரதமர் மோடியே சொன்னபிறகும் எதற்காக இந்தியை தேசிய மொழியாக முயற்சிக்க வேண்டும். உலகின் மூத்த மொழியான தமிழையே தேசிய மொழியாக அறிவிக்கலாமே? மோடியே ஒத்துக் கொண்ட பிறகு அமித்ஷாவும், பாஜகவினரும் ஒத்துக்கொண்டுதானே ஆகணும்.

அந்நிய மொழி ஆங்கிலம் கற்பீர்கள். இந்திய மொழி இந்தியை கற்க மாட்டீர்களா? என்று பாஜகவினர் கேட்கின்றனர்.

நாசா, மைக்ரோசாஃப்ட், கூகுள் போன்ற பெரு நிறுவனங்கள் இன்று தமிழனை சிவப்பு கம்பலம் போட்டு வரவேற்பதற்கு எங்களுக்கு ஆங்கிலம் தெரிந்துள்ளது என்ற காரணத்தினாலும்தான். அது அறிஞர் அண்ணா தமிழகத்திற்கு வழங்கிய இருமொழிக் கொள்கையால் தான் சாத்தியமானது.

ஒருவேளை ஆங்கிலத்துக்கு பதிலாக இந்தியை வைத்திருந்தல் நாமும் பானி பூரி தான் விற்றுக் கொண்டிருக்க வேண்டியிருக்கும்.

இன்று இந்தியா இப்படியொரு வளர்ச்சி அடைந்துள்ளதற்கும், வேகமாக முன்னேறி வருவதற்கும் ஆங்கிலமும் ஒரு காரணம்.

தகவல் தொழில்நுட்பத் துறையில் இந்தியாவின், பெங்களூரும், தமிழ்நாடும் சிறந்து விளங்குவதற்கு காரணமும் ஆங்கிலம் தெரிந்திருப்பதால்தான்.

பலமொழி என்றால் இந்தியா என்ற ஒரு நாடு இருக்கும். ஒரு மொழி என்றால் ரஷ்யா பல துண்டானதுபோல இந்தியாவும் பிரியும் அபாயம் உள்ளது.

விருப்பம் இருந்தால் எந்த மொழியையும் யாரும் கற்கலாம். ஒரு அரசு ஒற்றை மொழியை கற்றுக் கொள் என்று திணிப்பதற்கு பதிலாக இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் தாய் மொழிக்கும் முக்கியத்துவத்தையும், அதற்கான அங்கீகாரத்தையும் கொடுக்க வேண்டும். அதுதானே சரி.

அரசியல்