எழுச்சி நன்னயம்

image

எழுச்சி
நன்னயம்

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

 

ஏதும் இல்லாதவரின் கடும்பசியைத் தீர்த்து வையுங்கள். பொருளைப் பெற்றவன் சேமித்து வைக்கும் இடம் அதுவே என்கிறது குறள்.

 

கொரோனா காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு, சாமானிய மக்களின் வாழ்க்கையை வெகுவாக புரட்டிப்போட்டுள்ளது. ஊரடங்கால் வேலை வாய்ப்புகளை இழந்து, உழைத்துப் பிழைக்கவும் வழியில்லாமல் பலர் பட்டினியினால் தவித்து வருகிறார்கள். அதிலும் சிறு குழந்தைகளை வைத்திருப்பவர்களின் பாடு சொல்லி மாளாது. கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளை விட கொடும் பசியால் ஏற்படும் உயிரிழப்புகள் அதிகமாகிவிடுமோ என்ற அச்சம் பல இடங்களில் ஏற்பட்டுள்ளது.

 

சென்னையில் சில இடங்களில் வெட்கத்தை விட்டு வயதானவர்களும், பெண்களும், அவ்வளவு ஏன் ஆண்களே கூட, பெரிய மளிகை கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் மற்றும் ஓட்டல்கள் முன்னர் கையேந்தி நிற்பதைப் பார்க்கையில் மனதில் எழும் துயரத்தை வார்த்தைகளால் வடிக்க இயலாது. அவ்வளவு துயரம் மனதை ஆட்கொள்கிறது. பலர் இவர்களைக் கடந்து சென்றாலும், ” எல்லோரும் அப்படி அல்ல… மனித மாண்பு இன்னமும் செத்து விடவில்லை..!” என்பதை நிரூபிக்கும் வகையில் சிலர் இவர்களுக்குத் தாராளமாக உதவுவதைப் பார்க்க முடிகிறது.

 

இன்னும் பல நூறு பேர், உணவு பொட்டலங்களைத் தயாரித்து எடுத்துக்கொண்டு வாகனங்களில் வீதி வீதியாக சென்று, சாலையோரங்களில் ஆதரவின்றி தவிப்பவர்கள் மற்றும் பசியால் தவிக்கும் ஏழை எளிய மக்களின் கரங்களில் கொடுத்து, அம்மக்களின் பசியாற்றி வருவதை சமூக வலைதளங்களில் பார்க்க முடிகிறது.

 

ஒருபுறம் அரசு தரப்பில் ரேஷன் மூலம் இலவச அரிசி, பருப்பு போன்ற உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது என்றாலும், இந்த உதவிகள் எதுவும் கிடைக்காத ரேஷன் கார்டுகளே இல்லாமல் தவிக்கும் குடும்பங்கள் பல ஆயிரம். ரேஷன் பொருட்கள் கிடைத்தும் குடும்ப உறுப்பினர்கள் அதிகம் என்பதால் பற்றாக்குறையால் பசியால் வாடுவோர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோக மருத்துவ தேவைகள், குழந்தைகளுக்கான கல்விச் செலவு எனத் தவிப்பவர்கள் ஏராளம்.

 

இந்த நிலையில், ” இந்த கொரோனா பேரிடர் காலத்தில் இதுபோன்று ஏழை எளிய மக்களுக்கு நானும் உதவத் தயார்.. ஆனால் எப்படி உதவுவது…? உண்மையிலேயே உதவி தேவைப்படுபவர்களை நான் எப்படி கண்டறிவது…?” என ஆயிரம் கேள்விகள் உங்கள் மனதில் அலையடிக்கும். கவலை வேண்டாம்… உங்களைப் போன்ற உதவத் துடிப்பவர்களையும், உதவித் தேவைப்படுபவர்களையும் இணைக்கும் பாலமாக களமிறங்குகிறது உங்கள் எழுச்சி நன்னயம்.

 

இதில் நாங்கள் எவ்விதமான பண பரிவர்த்தனையையும் நேரடியாக செய்யப்போவதில்லை. சொல்லப்போனால் “எழுச்சி’யின் பெயரால் எங்களுக்கு வங்கிக் கணக்கே இல்லை. நாங்கள் செய்யப்போவதெல்லாம், உதவ முன் வருபவர்களையும் உதவி தேவைப்படுபவர்களையும் இணைக்கும் பாலமாக செயல்படுவதுதான்.

உதவி தேவைப்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும்?

இந்த கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் நோக்கத்திலேயே இந்தக் காரியத்தை எழுச்சி முன்னெடுக்கிறது. எனவே உதவி தேவைப்படுபவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்கள் பற்றிய விவரங்கள், ஆதார் எண் மற்றும் புகைப்படத்துடன் கூடிய விவரங்களை https://ezhuchi.in/requesting-for-help/ என்ற இந்த இணைப்பை கிளிக் செய்து பதிவிட வேண்டும்.

உதவ விருப்பமுள்ளவர்கள் என்ன செய்ய வேண்டும்?

உதவி தேவைப்படுபவர்களின் விவரங்கள் கிடைத்தவுடன், தகவல்கள் மற்றும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு, அது குறித்த பட்டியல் இங்கே வெளியிடப்படும். உதவ விரும்புவர்கள், அதைப்பார்த்து, யாருக்கு உதவ விருப்பம் எனத் தெரிவித்தால், அவர்களது வங்கி கணக்கு விவரங்கள் சம்பந்தப்பட்டவருக்குத் தெரிவிக்கப்படும். அவர் நேரடியாகவே, விரும்பும் தொகையை சம்பந்தப்பட்டவரின் கணக்குக்குச் செலுத்தலாம்.

எழுச்சியும் தன் பங்குக்கு உதவிகளைச் செய்யும். “வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்…!” என அன்பையும் கருணையையும் அருளிய வள்ளலார் மகான் அவதரித்த மண் இது.

வாருங்கள் பசியாற்றுவோம்…!