ஜெயலலிதா இறந்த பிறகு, அதிமுக ஆட்சி முடியும் வரையில் ‘முதல்வர் நாற்காலி’யில் அமரலாம்’ என்கிற ஓ. பன்னீர் செல்வத்தின் கனவு, அடுத்த முதல்வராக சசிகலா தேர்வு செய்யப்பட்டதால் தகர்ந்தது. சசிகலா முதல்வர் ஆவதற்காகப் பன்னீர்செல்வம், தன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த 48 மணி நேரத்தில் பாஜக புள்ளி ஒருவர் கொடுத்த யோசனையின் பேரில் ஜெயலலிதா சமாதியில் அமர்ந்து ‘தர்மயுத்தம்’ தொடங்கினார் ஓபிஎஸ்.
‘அவமானப்படுத்தப்பட்டேன். கட்டாயப்படுத்தி ராஜினாமா வாங்கினார்கள்” எனச் சொல்லி சசிகலாவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினார். இன்னொரு பக்கம் ஊழல் வழக்கில் சசிகலா சிறைக்குச் செல்லும் சூழல் ஏற்பட, மன்னார்குடி குடும்பத்தினரின் மனதை கரைத்து எடப்பாடி பழனிசாமி முதலமைச்சர் ஆனார். அந்த கையோடு ஓ. பன்னீர் செல்வத்தையும் ஒரு வழியாக சமாதானப்படுத்தி, அவரது அணியினரை ஒன்றிணைத்து ஆட்சிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டார் எடப்பாடி.
அதே சமயம், சமரசத்துக்கு ஓ. பன்னீர் செல்வம் போட்ட நிபந்தனை, அதிமுகவை வழி நடத்திச் செல்ல “வழிகாட்டுதல் குழு அமைக்க வேண்டும்” என்பது. அப்போதைக்கு அந்த கோரிக்கைக்கு தலையாட்டி வைத்த எடப்பாடி, மெல்ல மெல்ல ஆட்சியிலும், கட்சியிலும் தனது அதிகாரத்தை வலுவாக நிலை நிறுத்திக் கொண்டு, ஓபிஎஸ்-ஸை முற்றிலுமாக ஓரம் கட்ட வைத்துவிட்டார்.
இனியும் பொறுத்தால் முதலுக்கே மோசமாகிவிடும் என்ற எண்ணத்தில்தான், கடந்த ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர தின விழா நிகழ்ச்சியில், தம்மை வரிசையில் நிற்க வைத்து எடப்பாடி கையால் விருது வாங்க வைத்ததைப் பொறுத்துக் கொள்ள முடியாமல், நிகழ்ச்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினார்.
அதைத் தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கும் எடப்பாடி ஆதரவாளர்களுக்கும் இடையே வெடித்ததுதான் ‘அடுத்த முதல்வர் வேட்பாளர் யார்?’ என்ற மோதல். பின்னர் நடந்த போஸ்டர் யுத்தம், சமாதான பேச்சுவார்த்தைகள், கட்சி அலுவலகத்தில் இரு தரப்புக்கும் இடையே நேருக்கு நேர் நடந்த சொற்போர், மூத்த அமைச்சர்களின் சமாதானப்படலங்கள் ஆகியவற்றுக்குப் பின்னர் ஒரு வழியாக ஓபிஎஸ் வாயாலேயே, அதிமுக முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி அறிவிக்கப்பட்டுள்ளார்.
எடப்பாடிக்கு இது முதல் ரவுண்ட் வெற்றி என்றால், ஓபிஎஸ் விடுத்த கோரிக்கைக்கு ஏற்ப அமைக்கப்பட்ட வழிகாட்டுதல் குழுவிலும், எடப்பாடியின் கையே ஓங்கி உள்ளது. திண்டுக்கல் சீனிவாசன், காமராஜ், சி.வி.சண்முகம், ஜெயக்குமார், தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் ஆகிய 11 பேர் கொண்ட வழிகாட்டுதல் குழுவில், இந்த 11 பேர் குழுவில் ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த 5 பேரும் எடப்பாடி அணியைச் சேர்ந்த 6 பேரும் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு வழியாக அதிமுகவில் எழுந்த பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது எனப் பார்த்தால், எதிர்பார்க்காத வெவ்வேறு திசைகளிலிருந்தெல்லாம் வெவ்வேறு எதிர்ப்புக் குரல்கள் எழத்தொடங்கி விட்டன.
குறிப்பாக மூத்த தலைவர்கள், ‘தங்களுக்கு இடம் அளிக்கப்படவில்லையே…’ என்ற அதிருப்தி அடைந்துள்ளனர். குறிப்பாக அமைச்சர் செங்கோட்டையன், செம்மலை, தம்பிதுரை, பண்ருட்டி ராமச்சந்திரன் போன்றவர்கள் மனக்குமுறல்களுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
அடுத்ததாக, இஸ்லாமியர்கள், பட்டியல் இனத்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பெண்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்படாதது குறித்தும், அதிருப்தி குரல்கள் வெடித்துள்ளன.
” சாதிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாகத்தான் இந்த குழு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். ஏற்கனவே எம்எல்ஏ, அமைச்சர், மாவட்டச் செயலாளர் பதவியில் உள்ளவர்களே இந்த வழிகாட்டுக்குழுவில் உள்ளார்கள், அமைச்சர்கள் மட்டுமேதான் கட்சியா? நிர்வாகிகள் கட்சியில் தீவிரமாக பணியாற்றவில்லையா? இந்தக்குழு அமைத்துள்ளதை பார்த்தால் கட்சிக்கு முக்கியத்தும் கொடுக்கவில்லை, ஆட்சிக்குத்தான் முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள். அவசர கோலத்தில் இந்த குழுவில் உறுப்பினர்களை தேர்வு செய்து போட்டுள்ளார்கள்” என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
“எம்ஜிஆருக்குப் பிறகு இந்த கட்சியை கட்டி காப்பாத்தி சிந்தாம சிதறாம ஒப்படைச்சவரு ஜெயலலிதா. கட்சியில் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது அதிகார மையமாக திகழ்ந்ததும் சசிகலா என்ற பெண்தான். இப்படியான வரலாற்றைக் கொண்ட கட்சியில் ஒரே ஒரு பெண்ணுக்கு கூடவா வழிகாட்டுதல் குழுவில் இடம்கிடைக்க தகுதி இல்லாம போச்சா? அதேபோல் தலித்துகளுக்கோ, இஸ்லாமியருக்கோ உரிய பிரதிநிதித்துவம் இல்லையே ஏன்?” என்றும் கேட்கப்படுகிறது.
இன்னொருபுறம் வழிகாட்டுதல் குழுவில் எடப்பாடியின் ஆதரவாளர்களாக இடம்பெற்றுள்ளவர்கள், அனுபவத்திலும், செல்வாக்கிலும் கை ஓங்கியவர்களாக உள்ளனர். அதே சமயம் ஓபிஎஸ் தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளவர்களில் ஜே.சி.டி.பிரபாகரன் மட்டுமே கட்சியில் ஓரளவுக்கு செல்வாக்கு உடையவராக உள்ளார். மனோஜ் பாண்டியன், மோகன், கோபாலகிருஷ்ணன், மாணிக்கம் போன்றவர்கள் குறைந்த அனுபவமும், செல்வாக்கும் உடையவர்களாக உள்ளனர்.
இது ஓபிஎஸ் ஆதரவாளர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது. அவர்கள் மிகுந்த அதிருப்தியில் உள்ளனர்.
அதே சமயம் எடப்பாடி தரப்பில் இடம்பெற்றுள்ளவர்கள், குறிப்பாக தங்கமணி, எஸ்.பி.வேலுமணி போன்றவர்கள் செல்வாக்கான அமைச்சர்களாகவும் பணபலத்தில் ஓங்கியவர்களாகவும் இருப்பதால், வழிகாட்டுதல் குழுவில் இடம்பெற்றுள்ள ஓபிஎஸ் ஆதரவாளர்களே எதிர்காலத்தில் எடப்பாடி முகாமுக்கு தாவி, ஓபிஎஸ்-ஸை அம்போ என கைவிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்கிறார்கள் எடப்பாடி விசுவாசிகள்.
எது எப்படியோ, அதிமுகவில் எழுந்துள்ள இந்த அதிருப்தி குரல்களால், அக்கட்சியில் அடுத்த பூகம்பம் வெடிக்க காத்திருக்கிறது. அதிலும் சசிகலா சிறையிலிருந்து விடுதலை ஆனால், மேலும் பரபரப்பான காட்சிகள் அதிமுகவில் அரங்கேறலாம்.