கட்டுரை

‘நீட்’ தேர்வு: கற்பனையும் நிஜமும்!

‘நீட்’ தேர்வு:  கற்பனையும் நிஜமும்!

க்டோபர் 17 ம் தேதியன்று ‘நீட்’ தேர்வு முடிவுகள் வெளியானபோது, தமிழக ஊடகங்களில் தமிழக அரசு பள்ளி மாணவரான ஜீவித்குமார் கொண்டாடப்பட்டார். ‘நீட்’ தேர்வில், இந்திய அளவிலான அரசு பள்ளி மாணவர்களில் ஜீவித்குமார் 720க்கு 664 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த நிலையில், அவரது எளிய குடும்ப பின்னணியையும், ஏழ்மையையும் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, அவரது வெற்றி உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கக்கூடியதுதான்.

ஆனால், இந்த வெற்றிக்குப் பின்னால் உள்ள உண்மை மிக கசப்பானது. அது, பிளஸ் 2 வில் சிறப்பான மதிப்பெண்களைப் பெற்ற போதிலும், ‘நீட்’ தேர்வில் முதல் முயற்சியில் குறைந்த மதிப்பெண்களே ஜீவித் குமாருக்கு கிடைத்துள்ளது. ஆனாலும் மருத்துவ படிப்பின் மீதுள்ள அவரது ஆர்வத்தை கருத்தில்கொண்டு, ‘நீட்’ தேர்வுக்கு எதிராக வேலையை ராஜினாமா செய்த ஆசிரியை சபரிமாலா, நல் உள்ளம் படைத்தவர்களுடன் சேர்ந்து முன்னின்று செய்த பொருளாதார உதவி மூலமே அவரால் இந்த வெற்றியைப் பெற முடிந்தது.

அரசு பள்ளி மாணவனுக்கு அரசாங்கம் செய்ய வேண்டியதை ஆசிரியை சபரிமாலா முன்னின்று செய்துகாட்டி உள்ளார். ஆனால், “ஜீவித்குமாரைப் போன்ற எண்ணற்ற எளிய குடும்பத்து அரசு பள்ளி மாணவர்கள் தமிழகம் முழுவதும் மருத்துவ கனவுகளுடன் உள்ளனர். இவர்கள் எல்லோருக்குமே இந்த உதவி கிடைக்குமா..? ஒரு அரசு பள்ளி மாணவரின் வெற்றி, மருத்துவ கல்வியில் சேர முயற்சிக்கும் அனைத்து அரசு பள்ளி மாணவர்களின் வெற்றியாகி விடுமா..?” என்ற கேள்வியை கல்வியாளர்கள் முன் வைத்தபோதுதான் அதில் உள்ள உண்மை என்ன என்பது புரிந்தது.

கற்பனையும் நிஜமும்

ஜீவித்குமார், இந்திய அளவிலான அரசு பள்ளி மாணவர்களில் முதலிடம் பெற்றாலும், அகில இந்திய ரேங்க் பட்டியலில் 1823 வது இடத்தில் உள்ளார். அதாவது அவருக்கு முன்னால் உள்ள 1822 மாணவர்களில் பெரும்பாலானோர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்த தனியார் பள்ளிகளில் படித்தவர்கள் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இத்தகைய சூழலில்தான், “தமிழ்நாட்டில் ‘நீட்’ தேர்ச்சி விகிதம் உயர்கிறது என்றும், இதனால் மருத்துவக் கல்லூரியில் சேரும் அரசு பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது போன்ற பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆனால், உண்மை நிலை என்ன என்பதை ஆங்கில ஏடு ஒன்று வெளியிட்ட புள்ளி விவர தகவல்கள் அந்த பிம்பத்தை அடித்து நொறுக்கி உள்ளது. இந்த ஆண்டு நீட் ‘கட்-ஆப்’ மதிப்பெண்கள் உயர்ந்துள்ள நிலையில், பெரும்பாலும் கிராமப் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த 8 மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவ படிப்பில் சேர அனுமதி கிடைக்கலாம் என அத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

மொத்தம் 720-க்கு 113 மதிப்பெண் எடுத்தால் ‘தேர்ச்சி’ என நிர்ணயித்துள்ளது தேசியத் தேர்வு முகமை ( National Testing Agency) ஒருவர் ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றாலே, மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து விடலாம் என்ற எண்ணம் மாணவ – மாணவியரிடையேயும், பெற்றோரிடையேயும் காணப்படுகிறது.

ஆனால் உண்மை நிலை வேறானது. ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெற்றால், அதனை அடிப்படையாகக் கொண்டு மருத்துவ படிப்பில் சேர விண்ணப்பிக்க மட்டுமே முடியும். . அதாவது, ஒரு பாடத்தில் 100-க்கு 35 எடுத்து, ‘ஜஸ்ட் பாஸ்’ ஆவதைப் போலத்தான்.

7.5% இட ஒதுக்கீட்டுக்கும் இழுபறி

இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களில் ‘நீட்’ தேர்வில் 89 பேர்தான் 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்தவர்கள். அரசின் பயிற்சி மையங்களில் படித்து, 500-க்கு மேல் மதிப்பெண் எடுத்த அரசு உதவிபெறும் மாணவர்கள் நான்கு பேர், 495 மற்றும் 497 மதிப்பெண் பெற்ற இரண்டு பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள் மற்றும் இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்கள் என மொத்தம் 8 பேருக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பு இருப்பதாக, உண்மை நிலையை புட்டு வைத்துள்ளது அந்த ஏடு.

அதுவும் அவர்களுக்கு அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. 300 மதிப்பெண்களுக்கு மேல் பெற்ற 89 பேரில், 82 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு – குறிப்பாக, அவர்களில் 423 மதிப்பெண் பெற்றவருக்குக் கூட, மருத்துவ படிப்பில் சேர இடம் கிடைக்கும் வாய்ப்பு இல்லை என்ற நிலையே காணப்படுகிறது.

இந்த சூழலில் எந்த அடிப்படையில், ‘நீட்’ தேர்வை நியாயப்படுத்த முடியும் என்ற கேள்வியை கல்வியாளர்கள் எழுப்புகின்றனர்.

இதனிடையே பல்வேறு தடைகளை மீறி ‘நீட்’டில் தேர்வாகி வரும் அரசுப் பள்ளி மாணவர்களால், தனியார் நீட் பயிற்சி மையங்களில் லட்சக்கணக்கில் கட்டணம் செலுத்தி படித்து நீட் தேர்வு எழுதி அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுடன் போட்டிப் போட முடியாது என்பதால், அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில், 7.5 சதவிகித உள் இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைத்துக்கட்சிகளும் இணைந்து ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பிய பிறகும், தமிழக கவர்னர் இன்னும் அதற்கு அனுமதி வழங்காமல் தாமதித்து வருகிறார்.

7.5% இட ஒதுக்கீடு சட்டம் குறித்து அதிகபட்சமாக ஒரிரு நாளில் சட்ட ஆலோசனை பெற்று முடிவெடுக்க முடியும். ஆனால், இம்மசோதா ஜூன் 15-ஆம் தேதி கவர்னருக்கு அனுப்பப்பட்டு 4 மாதங்கள் ஆகி விட்ட நிலையில் இன்னும் ஆலோசனை நடத்துவதாக கூறுவதை நம்ப முடியவில்லை.

கவர்னர் நிபந்தனை?

திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இவ்விஷயத்தில் அரசுக்கு முழு ஆதரவையும் அளிப்பதாக அறிவித்த நிலையில், அரசியல் அழுத்தங்கள் அதிகரித்ததால் தமிழக அமைச்சர்கள் குழு ஒன்று கவர்னர் பன்வாரி லால் புரோகித்தை நேரில் சென்று சந்தித்து, சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்க வலியுறுத்தியது. அப்போதுதான், இவ்விவகாரத்தில் கவர்னர் இழுத்தடிப்பதற்கான பின்னணி தெரிய வந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அதாவது, பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குத் தமிழக அரசு அனுமதி வழங்கினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீட்டுக்கு ஒப்புதல் வழங்கத் தயார் என கவர்னர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அதற்கு ஒப்புக்கொண்டால், தங்கள் அரசு மிக கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ள வேண்டியதிருக்கும் எனக் கூறி அதை ஏற்க அமைச்சர்கள் மறுத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்குத் தமிழக அரசு ஏற்கெனவே அனுமதி மறுத்த நிலையில், கவர்னரின் இந்த நிபந்தனையின் பின்னணியில் நிச்சயம் மத்திய அரசு இருக்கலாம் என்பதைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை.

இந்த இட ஒதுக்கீட்டின் கீழ் வரும் உயர் சாதியினருக்கு மற்ற பிரிவினரைக் காட்டிலும் கட் ஆஃப் மதிப்பெண் குறைவாக நிர்ணயிக்கப்படுவது சர்ச்சையைக் கிளப்பி உள்ளது. குறிப்பாக பொதுத் துறை வங்கி பணியிடங்களில் மற்ற அனைத்து பிரிவினரைக் காட்டிலும் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் சாதியினருக்கான கட் ஆஃப் மதிப்பெண், பட்டியலினத்தவரைக் காட்டிலும் குறைவாகவே இருப்பது குறித்த அதிருப்தி குரல்கள் எழுந்துள்ள நிலையில், மருத்துவ கல்வி படிப்புக்கும் அதை அமல்படுத்தினால், எத்தகைய எதிர்ப்புகள் எழும் என்பதை அதிமுக நன்றாகவே உணர்ந்துள்ளது.

கவர்னர் என்ன முடிவெடுக்கப் போகிறார்..?

About Author

மேகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *