இந்திய உயர்கல்வி நிறுவனங்களை உலகத்தர வரிசைப் பட்டியலில் இடம் பெற செய்ய வேண்டுமென்ற இலக்கை அடிப்படையாகக் கொண்டு IoE( (Institute ofEminence ) என்ற திட்டத்தை 2016 ஆம் ஆண்டு மத்திய அரசு அறிவித்தது.
இந்த சிறப்புத் தகுதி திட்டத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 10 அரசு உயர்கல்வி நிறுவனங்களில் 8 மத்திய அரசினுடையது 2 மாநில அரசினுடையது. அதில் ஒன்றுதான் அண்ணா பல்கலைக்கழகம்.
IoE தகுதி பெற்ற பல்கலைக்கழகங்கள் தங்களுக்கு அனுமதிக்கப்பட்ட உள்நாட்டு மாணவர் எண்ணிக்கையில் 30% வெளிநாட்டு மாணவர்களை அனுமதித்துக் கொள்ளலாம். பேராசிரியர் நியமனங்களில் 25% வரை வெளிநாட்டு பேராசிரியர்களை நியமித்துக் கொள்ளலாம்; மாணவர் சேர்க்கை முற்றிலும் திறமை அடிப்படையிலேயே இருக்க வேண்டும் அதற்கான முறையை பல்கலைக்கழகமே தீர்மானித்துக் கொள்ளலாம் என விதிமுறையில் கூறப்பட்டுள்ளது.
IoE இன் நோக்கமே இந்த பல்கலைக்கழகங்கள் உலகத் தர வரிசைப்பட்டியலில் முதல் 500 இடங்களுக்குள் வரவேண்டும் என்பதுதான். எனவே தமிழகம் மட்டுமில்லாது பிற மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் அனுமதித்தாக வேண்டும். ஆனால் தமிழகத்தில் 69% இடதுக்கீடு உள்ளது. மதிப்பெண் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கையும் நடைபெறுகிறது. இந்த நிலையில் மற்ற மாநிலத்தவர்களையும் அனுமதித்தால் எதனடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவார்கள்? நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்துவதே மத்திய அரசு கடைபிடித்துவரும் நடைமுறை. எனவே அண்ணா பல்கலைக்கழகத்திலும் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்.களில் உள்ளது போல இந்திய அளவிலான நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும். நீட் தேர்வை இதில் பொருத்தி பார்த்தால், இதில் உள்ள அபாயம் புரியும்.
இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப கல்லூரிகளில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகம் இந்திய நாட்டில் உள்ள முதல் தரமான பல்கலைகளில் ஒன்று. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் நிதியுதவிகளின் மூலம் தற்போதுள்ள உயர்நிலையை எட்டியுள்ளது. மேலும் தமிழ்நாட்டினுடைய சமூக – பொருளாதார வளர்ச்சியில், அண்ணா பல்கலைக்கழகத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். இங்கு பயின்று வெளியேறும் மாணவர்களுக்கு இந்தியாவின் முன்னணி நிறுவனங்களிலும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளிலும் பணியிட வாய்ப்பில் முன்னுரிமை அளிக்கப்படுவதுண்டு.
அண்ணா பல்கலைக்கழகத்தை தரம் உயர்த்துவது வரவேற்கக்கூடிய ஒன்றுதான் என்றாலும், இது இந்திய அரசு வசம் போனால், மாணவர் சேர்க்கை, ஆசிரியர்கள் – அலுவலர்கள் சேர்க்கை ஆகியவற்றில் கடைபிடிக்கப்படும் தமிழக நலன் சார்ந்த விதிமுறைகள், இட ஒதுக்கீடு போன்றவை தொடருமா என்பது குறித்த எந்த உத்தரவாதத்தையும் மத்திய அரசு அறிவிக்கவில்லை. ஏற்கெனவே ஐஐடி போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் ‘காவிமயம்’ ஆகி வருவதாக குற்றச்சாட்டுகள் அதிகரித்து வரும் நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் விஷயத்திலும் அது நடப்பதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.
இந்த நிலையில், IoE திட்டம் குறித்து ஆராய்ந்து கொள்கை முடிவு எடுப்பதற்காக தமிழக அரசால் அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவின் பரிந்துரை இன்னும் வெளிவராத சூழலில், தமிழக அரசின் அதிகாரத்தை மீறி, இப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா, இதற்காக செலுத்த வேண்டிய 1,570 கோடி ரூபாயை அண்ணா பல்கலைக்கழகமே செலுத்தும் என்றும், தமிழ்நாடு அரசிடம் அத்தொகையைக் கேட்க வேண்டியதில்லை என்றும் தன்னிச்சையான முடிவை எடுத்து, அதை மத்திய அரசுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியும் உள்ளார்
இது ‘உலகத் தரம்’ என்ற போர்வையில் அண்ணா பல்கலைக்கழகத்தை பறித்துக்கொள்ளும் முயற்சியாகவும், இதற்கு அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் சூரப்பா அப்பட்டமாக துணை போவதும் கண்கூடாக தெரிகிறது.
சூரப்பாவுக்கு இதற்கான அதிகாரத்தைக் கொடுத்தது யார்? தமிழகத்தில் தகுதிவாய்ந்த கல்வியாளர்கள் பலர் இருக்கையில், சூரப்பா அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டபோதே இப்படி எதிர்காலத்தில் ஏதாவது தமிழக நலனுக்கு விரோதமாக செய்வார் என்று சொல்லித்தான், அதற்கு எதிர்ப்பு கிளம்பியது. தற்போது அந்த அச்சம் உண்மைதான் என்பதை சூரப்பா நிரூபித்து விட்டார்.
எனவே, சூரப்பா துணைவேந்தராக நியமிக்கப்பட்டபோது அமைதியாக இருந்ததுபோன்று தற்போதும் இருக்காமல், மத்திய அரசுக்கு ஏஜென்ட் வேலை பார்க்கும் சூரப்பாவின் இந்த நடவடிக்கையை தமிழக அரசு கண்டிப்பதோடு, அண்ணா பல்கலைக்கழகம் பறிபோகாமல் காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் விரைந்து மேற்கொள்ள வேண்டும்!