டாடா குழுமத்துக்குச் சொந்தமான டைட்டன் நிறுவனத்தின் நகை அணிகலன்கள் நிறுவனமான தனிஷ்க் ( Tanishq), ஒரு விளம்பரத்தைத் தயாரித்து இருந்தது. ‘ஒற்றுமை’ எனப்பொருள்படும் ‘ஏகத்வம்’ எனும் பெயரிடப்பட்ட அந்த விளம்பரத்தில் ஒரு இஸ்லாமிய குடும்பம், தங்கள் கர்ப்பிணி மருமகளுக்காக ஒரு பாரம்பரிய இந்து வளைகாப்பு விழாவைக் கொண்டாடுவதை அந்த நிறுவனத்தில் விளம்பரத்தில் தனிஷ்க் காட்டி இருந்தது.
அந்த வளைகாப்பு நிகழ்ச்சி முழுவதும் இந்து முறைப்படி அமைந்து இருக்கிறது. “இது போன்ற சம்பிரதாயங்களை நீங்கள் கடைப்பிடிக்க மாட்டீர்களே” என மாமியாரை மருமகள் கேட்க, “மகளை சந்தோஷமாக வைத்திருப்பதே ஒவ்வோரு குடும்பத்தின் சம்பிரதாயம்” என்று மாமியார் கூறுவதோடு முடிகிறது அந்த விளம்பரம்.
வெறும் 45 நொடிகள் மட்டுமே ஓடக்கூடிய இந்த விளம்பரம், லவ் ஜிகாத்தை ஊக்கப்படுத்துவதாகக் கூறி, சமூக வலைதளங்களில் இந்துத்துவ ஆதரவாளர்கள் கொந்தளித்தனர். நடிகை கங்கனா ரணாவத், “தனிஷ்க் விளம்பரம் ‘லவ் ஜிஹாத்’ மட்டுமல்ல, பாலியல் உணர்வையும் ஊக்குவிக்கிறது” எனக் குற்றம் சாட்டினார்.
இந்துத்துவ ஆதரவாளர்களின் ட்ரோலிங்கில் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு மிரட்டல்கள் விடப்பட்டன. எதிர்ப்பு கடுமையாக இருந்ததால் கடைசியில் அந்த விளம்பரப் படத்தையே யூடியூப் சேனல் உள்பட தன்னுடைய அனைத்து அதிகாரபூர்வ பக்கங்களிலிருந்தும் நீக்கியது தனிஷ்க்.
மேலும், ” நாங்கள் கவனக்குறைவாகச் செய்த காரியத்தால் மக்களின் உணர்ச்சிகள் தூண்டப்பட்டிருந்தால் எங்களுடைய ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம்” என்ற அறிவிப்பையும் வெளியிட்டது அந்த நிறுவனம்.
விஷயம் இத்தோடு முடியவில்லை. குஜராத் மாநிலத்தின் காந்திகிராம் பகுதியில் உள்ள தனிஷ்க் நகைக்கடை ஒரு கும்பலால் தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்டது. மேலும் அந்த கடையின் மேலாளரை கட்டாயப்படுத்தி, அப்பகுதியில் உள்ள இந்து மக்களின் மனதை புண்படுத்திவிட்டதாக மன்னிப்புக் கடிதமும் எழுத வைத்தது அக்கும்பல்.
நீங்கள் இதை சமூக ஊடகங்களின் சக்தி அல்லது சமூக ஊடகங்களின் அபாயங்கள் என்று அழைக்கலாம். ஆனால் ஒரு விஷயம் மட்டும் நிச்சயம்… இரண்டு மதத்தவர்களுக்கு இடையிலான கலப்பு திருமணம் மற்றும் மத நல்லிணக்கத்தின் வெளிப்பாடாக காட்டப்படும் திருமண விளம்பரத்தை திரும்பப் பெற தனிஷ்க் நிறுவனம் நிர்பந்திக்கப்பட்ட விதம், நாம் எத்தகைய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற அபாயத்தை உணர்த்துகிறது.
“புண்படுத்தும் உணர்வுகள், நிறுவன ஊழியர்கள், நிறுவனத்தின் பார்ட்னர்கள் மற்றும் கடை ஊழியர்களின் பாதுகாப்பு கருதியே அந்த விளம்பரத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டோம்” என தனிஷ்க் அறிவித்துள்ளது.
இதனிடையே, ASCI எனப்படும் விளம்பரங்களின் தர நிர்ணயம் செய்யும் குழு (Advertising standards council of india), இந்த விளம்பரத்திற்கு எதிராகத் தங்களுக்கு அனுப்பப்பட்ட மனுவை நிராகரித்துள்ளது. “இந்த விளம்பரம் தாங்கள் விதித்துள்ள எந்த விதிகளுக்கும் புறம்பாகவும் இல்லை” என்றும் “இந்த விளம்பரத்தில் அநாகரிகமான காட்சிகளோ சமூகத்துக்குக் கேடு விளைவிக்கும் எந்த அம்சமும் இல்லை” எனவும் “இந்த விளம்பரத்தைத் தயாரித்த நிறுவனம் விரும்பினால் இதைப் பொதுவில் வெளியிட எந்தத் தடையும் இல்லை” என்று ஒருமனதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில், விளம்பரத்தைத் திரும்ப பெற்றுக் கொண்டதற்காக டாடா நிறுவனத்தை விமர்சித்து இன்னொரு பக்கம் இருந்தும் சர்ச்சை வெடித்தது. டாடா குழுமத்தின் தலைவரான ரத்தன் டாடாவும் இந்த விமர்சனத்திலிருந்து தப்பவில்லை. “ட்ரோலர்களை எதிர்க்க முதுகெலும்பு இல்லாதவராக உள்ளார்” என விமர்சனத்துக்குள்ளானார்.
டாடா குழும நிறுவனம் நேர்மையாகவும் துணிச்சலானதாகவும் இருக்கும் என்று தான் எதிர்பார்த்ததாக பிரபல எழுத்தாளர் சேத்தன் பகத் ட்வீட் செய்தார். “எதிர்ப்புக்கு அடிபணியாதீர்கள்…” என்றும் அவர் அறிவுறுத்தினார்.
விளம்பரம் திரும்பப் பெறப்பட்டது பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது உண்மை. எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த விளம்பரம் எந்தவொரு அரசியல் தொடர்பானதும் இல்லை, மாஏஆக இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வளர்ப்பதற்கான மற்றொரு நல்ல முயற்சியாகத்தான் பார்க்கப்பட்டது.
விளம்பரம் பெரும்பாலும் சமுதாயத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த விஷயத்தில் தனிஷ்க் விளம்பரம், பல தசாப்தங்களாக இந்திய வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக இருந்த, இருக்கும் மத ஒற்றுமையை வெளிப்படுத்தும் ஒரு முயற்சியாகும்.
ஆனால் சமூக ஊடகங்களின் அச்சுறுத்தல்கள், நேர்மறையான செய்தியை விரும்பும் நல்லெண்ணம் கொண்ட வாடிக்கையாளர்களையும், மத நல்லிணக்கத்தை விரும்பும் ஒரு நிறுவனம் மற்றும் அதன் ஊழியர்களின் மனதை புண்படுத்தி உள்ளது என்றால், அது மிகையில்லை.