உலக பட்டினி குறியீடு பட்டியலில், அதிக மக்கள் பட்டினியால் வாடும் நாடுகளில் இந்தியா 94வது இடத்தில் உள்ளதாகவும், இந்தியாவில் 14 சதவீத மக்கள் ஊட்டச்சத்து குறைபாடு உடையவர்கள் என்றும் வெளியாகி இருக்கும் ( Global Hunger Index – GHI report) செய்தி மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக உள்ளது.
இதில் அண்டை நாடுகளான இலங்கை, நேபாளம், வங்கதேசம், பாகிஸ்தான் போன்றவற்றைவிட இந்தியா பின்தங்கி இருப்பது, நமது அரசின் கொள்கை வகுப்பாளர்களும், அரசும் விழித்துக் கொள்ள வேண்டியதை உணர்த்துகிறது.
“அண்டை நாடுகள் எல்லாம் சிறிய நாடு… அதனால் அந்த நாடுகளுடன் நம்மை ஒப்பிட முடியாது” என்று வாதிடுபவர்கள், நம்மை விட மக்கள் தொகை அதிகம் கொண்ட சீனா, இந்த பட்டியலில் 5 வது இடத்தில், மிகுந்த முன்னேற்றமான நிலையில் இருப்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. உலக மக்கள் தொகையில், இந்த இரண்டு நாடுகளும் ஐந்தில் இரண்டு பங்கைக் கொண்டுள்ளன. பொருளாதார முன்னேற்றத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் வரை சீனாவுடன் போட்டிப்போடும் அளவுக்கு முன்னேறிய இந்தியா, தற்போது மிகவும் பின் தங்கி உள்ளது. ஆனால், கொரோனா பாதிப்பிலும் இந்தியாவை மட்டுமல்லாது உலக நாடுகளே வியந்து பார்க்கும் அளவுக்கு பொருளாதாரத்தில் முன்னேறி உள்ளது.
இந்தியா மனித வளங்களிலும், இயற்கை வளங்களிலும், உழைப்பிலும் சீனாவுக்கு சற்றும் சளைத்ததல்ல. சிறந்த கொள்கை வகுப்பாளர்கள், திறமையான அதிகாரிகள் என இந்தியாவில் எதற்கும் குறைவில்லை. ஆனால், அதிகாரத்தில் மையத்தில் இருப்பவர்கள், குறிப்பிட்ட சிலரின் நலன்களுக்காகவே சிந்திப்பதும், திட்டமிடுவதுமே இத்தகைய பின்னடைவுகளுக்கு காரணமாகின்றன.
உலக வறுமைக் குறியீட்டின்படி, இந்தியா பல பத்தாண்டுகளாகவே ஊட்டச்சத்துக் குறைபாடு பிரச்சனையில் சிக்கி இருக்கிறது. இதில் முன்னேற்றம் அடைந்தால்தான், அது வறுமை ஒழிப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றும்.
இந்திய குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டுக்கு ஒரு புறம் வறுமை காரணம் என்றால், இன்னொரு புறம் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவு பண்டங்களின் விற்பனை அதிகரித்துள்ளதும் மற்றொரு கவலைக்குரிய முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ஊட்டச்சத்து குறியீட்டு அறிக்கையின் படி, ‘மிகுந்த ஊட்டச்சத்து மிக்கது’ என்ற வாசகங்களுடன் உணவு தயாரிப்பு நிறுவனங்களால் விற்கப்படும் பாட்டில் பானங்கள் மற்றும் உணவு பண்டங்களில் பெரும்பாலானாவை அப்படி ஊட்டச்சத்து எதையும் கொண்டிருக்கவில்லை என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியவையாக இருக்கின்றன.
தற்போது கொரோனா வந்து நிலைமையை சற்று மாற்றிவிட்டது. இல்லையெனில், கடந்த ஆண்டு வெளியான ஆய்வின்படி, பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்கள் விற்பனை சந்தையில், சீனா மற்றும் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா, 2020 ஆம் ஆண்டில் 3 வது இடத்தைப் பிடித்திருக்கும்.
எனவே, சந்தையில் விற்கப்படும் பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பண்டங்களில் ஊட்டத்து மிக்கதாகவும், தரமானதாகவும் இருக்கும் வகையிலான ஒரு விரிவான கொள்கையை அரசு வகுப்பது மிகவும் அவசியமானது.
இந்திய குழந்தைகளுக்கான ஊட்டச்சத்து குறைபாடும், பட்டினியும் யாருக்கான பிரச்சனையோ என அதிகாரத்தில் இருப்பவர்கள் அலட்சியமாக இருந்து விடக்கூடாது. அவை நாட்டின் எதிர்கால பொருளாதாரத்தையே பாதிக்கக்கூடியவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை ஒழிப்பதற்கான திட்டத்துக்காக அமெரிக்கா ஒரு டாலரை முதலீடு செய்தால், அதற்கு 18 டாலரை வருவாயாக திரும்ப பெறுவதாக அந்த நாட்டின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதிலிருந்தே ஊட்டச்சத்து குறைப்பாட்டை ஒழிப்பதற்கான திட்டங்களுக்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகள் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
எனவே ஊட்டச்சத்து குறைபாட்டை ஒழிப்பதற்கான திட்டங்களுக்கு அரசும் அரசின் கொள்கை வகுப்பாளர்களும் முன்னுரிமை அளிக்க வேண்டும்!