கட்டுரை

அசிங்கப்பட்ட அர்னாப்… அம்பலமான டிஆர்பி தில்லுமுல்லு!

அசிங்கப்பட்ட அர்னாப்… அம்பலமான டிஆர்பி தில்லுமுல்லு!

ர்னாப் கோஸ்வாமிக்கு அறிமுகம் தேவையில்லை. ஆரம்ப காலத்தில் என்டிடிவி, பின்னர் டைம்ஸ் நவ் தொலைக்காட்சியில் பணியாற்றி, தற்போது சொந்தமாக ரிபப்ளிக் தொலைக்காட்சியை நடத்திக் கொண்டிருப்பவர்.

‘மோடி டிவி’ என நாமகரணம் சூட்டப்படாத குறை ஒன்றுதான். மற்றபடி அந்த சேனலில் சொல்லப்படும் செய்திகள் ஆகட்டும், நடக்கும் விவாதங்கள் ஆகட்டும்… அனைத்துமே பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் துதிபாடுபவையாகவே இருக்கும்.

“நம்ம ஊரிலும்தான் ஜெயா, கலைஞர் தொலைக்காட்சி, நியூஸ் ஜெ மற்றும் மக்கள் தொலைக்காட்சி என கட்சி சார்ந்து சேனல்கள் இருக்கின்றன. அதேபோன்று வட இந்தியாவில் அவர் மோடிக்கு ஆதரவாக ரிபப்ளிக் தொலைக்காட்சியை நடத்திவிட்டுப் போகிறார்… அதில் என்ன பிரச்சனை..?” என்ற கேள்வி எழலாம்.

பிரச்சனை, ரிபப்ளிக் தொலைக்காட்சி மோடியை ஆதரிப்பதில் இல்லை. ஜர்னலிசத்துக்கு ( Jounalism) என இருக்கும் ஊடக நெறியை காலில் போட்டு மிதிக்கும் விதமான அவரது நடத்தைகள்தான். “ரிபப்ளிக் தொலைக்காட்சியால் ஊடக துறைக்கே அவமானம்!” என்பதுதான் பல மூத்த நேர்மையான பத்திரிகையாளர்களின் குமுறல்கள்.

அவரது தொலைக்காட்சியில் பணிக்கு சேர்ந்து, பின்னர் அவரது செயல்பாடு பிடிக்காமல் வெளியேறிய பத்திரிகையாளர்கள் ஏராளமானோர் உள்ளனர். “ஊடக தர்மத்துக்கு எதிராக அர்னாப் எப்படியெல்லாம் தங்களை நடந்து கொள்ளச் செய்வார்… எப்படியெல்லாம் பிடிக்காத அரசியல்வாதிகளின் வீடுகளுக்குள்ளேயே கேமராவும் மைக்குமாக அத்துமீறி நுழைந்து கருத்து கேட்க சொல்லுவார்… கருத்து தெரிவிக்க மறுத்து செய்தியாளரை வீட்டை விட்டு வெளியேறச் சொன்னால் அதையும் எப்படி திரித்து செய்தியாக்க சொல்வார்….” என்பதையெல்லாம் அந்த பத்திரிகையாளர்கள் பொது வெளியில் பகிர்ந்தவை இணையதளங்களில் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.

அர்னாப் அரங்கேற்றிய மோசடி

மோடி எதிர்ப்பாளர்களை ‘ கேரக்டர் அசாசினேஷன்’ (character assassination) செய்வதில் அர்னாப் கில்லாடி. கத்தி பேசுவதும், எதிர்கருத்து உடையவர்களிடம், தான் சொல்வதையே ஏற்றுக்கொள்ள வேண்டும் என எதேச்சதிகாரத்துடன் நடந்து கொள்வதுமாக அவர் கடைப்பிடிப்பது அருவருப்பான ஜர்னலிச உத்தி.

அதைவிட அருவருப்பு, இப்படியான தனது ஒரு சார்பு ஊடகமான ரிபப்ளிக் தொலைக்காட்சிதான் மக்களால் அதிகம் பார்க்கப்படுகிறது என்பதைக் காட்டி, விளம்பர வருவாய் ஈட்டுவதற்காக டிஆர்பி ரேட்டிங்கில் செய்த மோசடி.

நம்ம ஊரில் ரிபப்ளிக் தொலைக்காட்சி அளவுக்கு இல்லாவிட்டாலும் கூட ஜெயா, கலைஞர், நியூஸ் ஜெ போன்ற தொலைக்காட்சிகளில் ஏதாவது ஒன்று, ” எங்கள் டிவிதான் மக்களால் அதிகம் பார்க்கப்படுகிறது” எனச் சொன்னால் நாமெல்லாம் எத்தனை வடிவேல் மீம்ஸ்களைப் போட்டு தெறிக்க விடுவோம். ஆனால், கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் ரிபப்ளிக் தொலைக்காட்சி அதைத்தான் நீண்டகாலமாக செய்து வருகிறது.

2017 ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேனல், ஓரிரு மாதங்களிலேயே, அதற்கு பல வருடங்களுக்கு முன்னரே தொடங்கப்பட்ட பல ஆங்கில செய்தி சேனல்களையெல்லாம் பின்னுக்குத் தள்ளிவிட்டு, ” டிஆர்பி-யில் நாங்கதான் நம்பர் ஒன்” என்று அறிவித்தபோது பலரும் குழம்பித்தான் போனார்கள். ஒரு சிலர்தான் இது மோசடி எனச் சொல்லி வந்தார்கள் என்றாலும், அவர்கள் குரல் அதிகம் எடுபடவில்லை.

அதே சமயம் ” மோடியை ஆதரித்தால் நம்பர் ஒன் என்றால், நாமும் அதே வழியில் போகலாமே…?!’ என முடிவெடுத்த பல முன்னணி செய்தி சேனல்களும், மோடியையும், பாஜகவையும் ஆதரிப்பதில் ரிபப்ளிக் தொலைக்காட்சிக்கு போட்டியாக களம் இறங்கின. அதே பாதையை மற்ற இந்தி சேனல்களும் பின்பற்றியதால்தான், வட இந்தியாவில் மோடி ஒரு அவதார புருஷராகவே முன்னிறுத்தப்பட்டு, அவரது ஆட்சியின் தவறுகள் அனைத்தும் மறைக்கப்பட்டு, மக்கள் மயக்க நிலையிலேயே வைக்கப்பட்டனர்.

இப்படி வட இந்திய ஊடகங்கள், மோடியைப் போட்டிப் போட்டி ஆதரிக்கும்போது, தமிழகத்தில் உள்ள தொலைக்காட்சிகளில் விவாத நிகழ்ச்சிகளில் மோடிக்கு எதிரான கருத்துகள் முன்வைக்கப்படுவதைப் பார்க்கையில், மத்திய பாஜகவுக்கும், தமிழகத்தில் உள்ள மோடி ஆதரவாளர்களுக்கும் அதை துளியும் ஜீரணித்துக்கொள்ள முடியாமல் போகின்றன. அதன் வெளிப்பாடுதான் சமீபத்தில் News 18 தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியின் நெறியாளர் ஒருவர் குறிவைக்கப்பட்டு, அது தொடர்பாக நடந்த பரபரப்பான நிகழ்வுகள்.

மும்பை காவல்துறை மீது அவதூறு

இந்த சூழலில்தான், ரிபப்ளிக் தொலைக்காட்சியும் அர்னாப்பும் எப்படி விளம்பரதாரர்களை ஏமாற்ற டிஆர்பி ரேட்டிங்கில் மோசடி செய்தார்கள் என அம்பலப்படுத்தி உள்ளது மும்பை காவல்துறை. குறிப்பாக பாலிவுட் நடிகர் சுஷான்சிங் ராஜ்புத் தற்கொலை செய்து கொண்டதை, “கொலை” என பரபரப்பாக்கி, ஏறக்குறைய இரண்டு மூன்று மாதங்களாக நாட்டில் விவாதிக்க வேறு பிரச்சனையே இல்லாதது போன்று தொடர்ந்து அதையே விவாத பொருளாக்கினார் அர்னாப். மும்பை காவல் துறை, பாலிவுட்டின் வாரிசு நடிகர்களுக்கு ஆதரவாக ராஜ்புத் கொலையை தற்கொலை என மூடி மறைப்பதாக குற்றம் சாட்டி, இவ்வழக்கை சிபிஐ-க்கு மாற்றும் அளவுக்கு கொண்டு சென்றார்.

சுஷான்சிங் பீகாரைச் சேர்ந்தவர் என்பதால், அவரது இறப்பை வைத்து வாக்கு அறுவடை செய்ய நினைத்த பாஜக, பீகாரில் இதை தேர்தல் பிரச்சனையாக முன் வைத்து பிரசாரம் செய்து கொண்டிருந்த தருணத்தில்தான், சுஷான்சிங் தற்கொலைதான் செய்துகொண்டார் என மத்திய அரசின் அதிகார பிடியில் இருக்கும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையே சில தினங்களுக்கு முன்னர் அறிவித்ததில், அம்பலப்பட்டுப்போனார் அர்னாப்.

இதனிடையே தங்களை ட்விட்டரில் தூற்றிய 80,000 கணக்குகள் போலியான முகவரிகளை கொண்டவை என்று மும்பை காவல்துறை கூறி இருக்கிறது. சுமார் 80 ஆயிரத்திலிருந்து ஒரு லட்சம் போலிக் கணக்குகள் இப்படி உருவாக்கப்பட்டு இருக்கலாம் என்றும், இந்தியா, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து தங்களுக்கு எதிராகத் திட்டமிட்டு அவதூறுப் பதிவுகள் பகிரப்பட்டுள்ளன என்றும் தெரியவந்துள்ளதாக மும்பை காவல்துறை அறிவித்தது,

தொடர்ந்து இது தொடர்பான விசாரணையை பல்வேறு கோணங்களில் மேற்கொண்டபோதுதான், ரிபப்ளிக் தொலைக்காட்சியின் டிஆர்பி ரேட்டிங் மோசடி குறித்து தெரியவந்துள்ளது.

தில்லுமுல்லு நடந்தது எப்படி?

ரிபப்ளிக் தொலைக்காட்சி உட்பட மூன்று சேனல்கள் டிஆர்பி- யில் முறைகேடு செய்ததாக அக்டோபர் 8 ஆம் தேதியன்று செய்தியாளர்களிடம் பேசிய மும்பை காவல்துறை ஆணையர் பரம் பீர் சிங் தெரிவித்தார்.

வீடுகளில் எந்தத் தொலைக்காட்சி நிகழ்ச்சி அதிகமாக பார்க்கப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு டிஆர்பி என்ற அளவீடு உதவுகிறது. இதனை கண்காணிக்க மும்பை நகரம் முழுக்க 2000 பாரோமீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்டுள்ள அர்னாப் கோஸ்வாமி நிர்வகிக்கும் ரிபப்ளிக் டிவி, ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள், டிஆர்பி ரேட்டிங்கை மதிப்பிடும் பணியில் ஈடுபட்டுள்ள ஹன்ஸா என்ற நிறுவனத்தின் முன்னாள் ஊழியர்களை கையில் போட்டுக்கொண்டு, இந்த மோசடியை அரங்கேற்றி உள்ளன.

“குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள், தொலைக்காட்சியில் அவர்களுடைய சேனல் மட்டுமே வைக்க வேண்டும் என சில வீடுகளுக்கு லஞ்சம் கொடுத்துள்ளனர்.
முறைகேடாக டிஆர்பியை பெற்றதன் மூலம் விளம்பரங்களில் இருந்து வருமானம் ஈட்டியுள்ளார்கள். இது மோசடியாக கருதப்படும். எத்தனை உயர் பதவியில் இருந்தாலும் கூட, சேனலுடன் சம்மந்தப்பட்ட அனைவரும் கேள்விக்கு உட்படுத்தப்படுவார்கள். தேவைப்பட்டால் விசாரணையும் நடத்தப்படும்” என பரம் பீர் சிங் தெரிவித்த நிலையில், இந்த மோசடி தொடர்பாக ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா நிறுவன உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்கள்.

விளம்பரங்கள் இனி கிடைக்காது?

ஆனால், டி ஆர் பி முறைகேடு குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள அர்னாப், சுஷாந்த் சிங் வழக்கில் மும்பை போலீசை கேள்வி கேட்டதால் பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்துவதாக கூறியுள்ளதோடு, முடிந்தால் தம்மை கைது செய்து பாருங்கள் என மும்பை காவல்துறை ஆணையருக்கு சவாலும் விடுத்துள்ளார். கூடவே மும்பை காவல்துறைக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்குத் தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மோசடியான டிஆர்பி ரேட்டிங் குறித்து பஜாஜ் உள்ளிட்ட பல முன்னணி பிராண்ட் நிறுவனங்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளன. பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ராஜிவ் பஜாஜ், மேற்கூறிய 3 சேனல்களையும் தங்கள் நிறுவனம் கறுப்பு பட்டியலில் சேர்த்துள்ளதாகவும், இனி இந்த நிறுவனங்களுக்கு விளம்பரங்களை வழங்க மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார். இந்த சேனல்கள் சமூகத்துக்கே நச்சு என்று தாம் கருதுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஏற்கெனவே தாங்கள் ஸ்பான்ஷர் செய்யும் நிகழ்ச்சிகளில் வெறுப்பு கருத்துகளைப் பரப்புவது போன்ற செய்திகளோ, விவாதங்களோ கூடாது என இந்திய விளம்பர ஏஜென்சிகள் சங்கம் முன்னர் அதிருப்தி வெளியிட்டிருந்த நிலையில், அர்னாப் ரக சேனல்கள் இனி ஆட்டம் காண ஆரம்பிக்கலாம்!

About Author

மேகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *