வெங்காயத்தின் விலை கிலோ 100 ரூபாயைத் தாண்டி விற்கப்படுகிறது.
வேளாண் சட்டத்தின்படி அத்தியாவசிய பொருட்களில் இருந்து வெங்காயத்தை மத்திய அரசு நீக்கி விட்ட நிலையில், பதுக்கல் காரர்களுக்கு இது அருமையான வாய்ப்பு என்பதால், வெங்காயத்தின் விலை இன்னும் அதிகரித்து, வெங்காயத்தை உரிக்காமலேயே மக்களின் கண்களிலிருந்து கண்ணீரை வரவழைத்து விடும் அபாயம்.
மக்களுக்கான வெங்காயத்தின் தேவை ஆண்டு முழுவதுமே ஏறக்குறைய ஒரே அளவில்தான் உள்ளது. ஆனால் சந்தைக்கு புதிய வெங்காயத்தின் உடனடி வரத்து, ஒரு ஆண்டில் அதிகபட்சம் 8 மாதங்களுக்கு மட்டுமே காணப்படுகிறது. தற்போது தொடர் மழையால் ஆந்திரா, கர்நாடகாவிலிருந்து வரத்து குறைந்ததால் வெங்காயம் விலை அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
மழை, வெள்ளம் போன்ற சீதோஷ்ண நிலை மற்றும் விளைச்சல் குறையும் காலங்களில் வெங்காயத்தின் விலை அதிகரிப்பதற்கு நம்மிடம் போதிய குளிர்பதன கிடங்குகள் இல்லாததுதான் முக்கிய காரணம்.
பல ஆயிரம் டன் வெங்காயம் விளைகிறது. ஆனால் அழுகும் பொருளான வெங்காயத்தைச் சேமித்து வைக்க போதுமான குளிர்பதன கிடங்குகளோ அல்லது காற்றோட்டமுள்ள திறந்தவெளி பட்டறைகளோ நம்மிடம் இல்லை. அவை பற்றாக்குறையாகவே உள்ளன.
இயற்கை சீற்றங்களால் வெங்காய விளைச்சல் பாதிக்கப்படும்போது, அரசு ஏஜென்சிகளிடம் இருக்கும் வெங்காய இருப்புதான் அதன் விலை ஏற்றத்தை தடுக்க உதவும். எனவே இருப்பு எவ்வளவு என்பதை கணித்து, விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்படுமா என்பது குறித்து முன்கூட்டியே கணித்து, உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியதும் இந்த ஏஜென்சிகளின் கடமைதான்.
மேலும், குளிர் காலத்தில் துவங்கி இலையுதிர் காலத்தில் அறுவடை செய்யப்படும் ரபி பருவத்தின்போது கிடைக்கும் வெங்காயத்தைப் போதுமான அளவில் இருப்பு வைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதும் இந்த ஏஜென்சிகள்தான்.
தற்போது வெங்காய விலை அதிகரிப்பு குறித்து மக்களிடையே அதிருப்தி குரல் எழத்தொடங்கியதும், கூட்டுறவு பண்ணை பசுமைக் காய்கறி கடைகள் மூலமாக கிலோ 45 ரூபாய்க்கு வெங்காயம் விற்பனை செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
வேளாண் விளை பொருட்களைப் பொறுத்தவரை அவற்றின் விலை ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டவை. எனவே விலையேற்றம் காணப்படும் நேரத்தில் மட்டும் விழித்துக்கொண்டு தீர்வு காண முயற்சிக்காமல், விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த அரசு முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது. இதில் மாநில அரசுக்கு மட்டுமல்லாது, மத்திய அரசுக்கும் பங்கு உள்ளது.
வேளாண் விளை பொருட்கள் விலை ஏற்ற இறக்கத்துக்கு உட்பட்டவை. எனவே விலையேற்றம் காணப்படும் நேரத்தில் மட்டும் விழித்துக்கொண்டு தீர்வு காண முயற்சிக்காமல், முன்கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டியது மிகவும் அவசியமானது.