கட்டுரை

பாஜக Vs சிவசேனா: ‘காவி’ அடையாளத்துக்காக ‘காப்பி ரைட்’ சண்டை!

பாஜக Vs சிவசேனா: ‘காவி’ அடையாளத்துக்காக ‘காப்பி ரைட்’ சண்டை!

காராஷ்டிராவில் சிவசேனாவுக்கும் அம்மாநில ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரிக்கும் இடையேயான மோதல், மகாராஷ்டிரா மாநில அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள சூழலில், சிவசேனாவின் ‘காவி’ அடையாளத்தை சிதைப்பதற்கான நடவடிக்கைகளைத் தொடங்கி உள்ளது பாஜக.

மகாராஷ்டிரா சட்டமன்ற தேர்தலில் பாஜகவும் சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. ஆனால், முதல்வர் பதவியை பாஜக தொடர்ந்து தன்னிடமே வைத்துக் கொள்வதை விரும்பாத சிவசேனா, இந்த முறை தனக்கு முதல்வர் பதவி தனக்குத்தான் தரப்பட வேண்டும் என வலியுறுத்தியதால் கூட்டணி முறிந்தது. “இனியும் முதல்வர் பதவி அவர்கள் வசம் இருந்தால், மற்ற மாநிலங்களில் உள்ள கட்சிகளை காலி செய்தது போன்று, தங்களையும் காலி செய்து விடுவார்கள்” என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவே முதல்வர் பதவியில் பிடிவாதம் காட்டியது சிவசேனா. அதைத் தொடர்ந்து சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியை உடைத்து ஆட்சியமைக்க பாஜக மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிவடைந்தது.

இந்த நிலையில், ‘மண்ணின் மைந்தன்’ என்ற அடிப்படையில் சிவசேனா மீது எப்போதுமே மறைமுக பாசம் கொண்ட சரத் பவாரின் தீவிர முயற்சியால் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியாவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய ‘மகா விகாஷ் அகாடி’ கூட்டணி மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்தது. “இது ஒரு பொருந்தா கூட்டணி… நீண்ட நாட்களுக்கு நீடிக்காது…” என்ற எதிர்பார்ப்பில் உள்ள பாஜக, அப்படி கூட்டணி உடைந்தால் சரத் பவார் கட்சி எம்.எல். ஏ-க்களை தங்கள் பக்கம் இழுத்து ஆட்சியமைக்கலாம் என்ற திட்டத்தில் உள்ளது.

சிவசேனாவை உடைக்க தயங்கும் பாஜக

அதே சமயம் இதே சூழல் வேறு மாநிலத்தில் நிலவி இருந்தால், கூட்டணியை எப்போதோ உடைத்து சிவசேனா போன்ற மாநில செல்வாக்கு மட்டுமே கொண்ட கட்சியின் எம்.எல். ஏ-க்களை தனது பக்கம் பாஜக இழுத்திருக்கும். ஆனால், மகாராஷ்டிராவில் மட்டும் அதை அக்கட்சி செய்யவில்லை. ஏனெனில் சிவசேனாவுக்கு அப்படி ஒரு துரோகத்தை செய்து விட்டு, மாநிலத்தில் பாஜக நிம்மதியாக ஆட்சி செய்துவிட முடியாது. குறிப்பாக வர்த்தக தலைநகரான மும்பையில் முன்னணி தொழிலதிபர்களாகவும் வியாபாரிகளாகவும் கோலோச்சுபவர்களில் பெரும்பாலானோர் பாஜகவுக்கு படியளக்கும் பிற வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். குறிப்பாக குஜராத்திகள் அதிகம். அப்படி ஒரு வேளை ஆட்சி கவிழ்க்கப்பட்டால், அது மும்பையில் பெரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வித்திடுவதோடு மட்டுமல்லாது, மீண்டும் ‘மண்ணின் மைந்தர்’ கோஷம் உரத்து ஒலிக்கத் தொடங்கும்.

அதுமட்டுமல்லாது, சட்டசபை தேர்தல் முடிந்த கையோடு முதல்வர் பதவி யாருக்கு என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டபோது, சிவசேனாவை உடைத்து, அதன் எம்.எல்.ஏ-க்களைத் தங்கள் பக்கம் இழுக்கலாமா என பாஜக ஆலோசித்து வருவதாகவும், கட்சித் தாவும் எம்.எல்.ஏ-க்களுக்கான பண பேரத்தை செட்டில் செய்ய, ‘முன்னணி தொழிலதிபர்’ ஒருவர் பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் உத்தவ் தாக்கரேவின் காதுக்கு தகவல் வந்தவுடன், அவர் உடனே அந்த பெரிய தொழிலதிபருக்கு போனை போட்டு,” மும்பையில் மட்டுமல்ல… மகாராஷ்டிராவில் எங்கேயும் உங்கள் நிறுவனம் தொழில் செய்ய முடியாது” என எச்சரித்ததாக அப்போது ஊடக வட்டாரங்களில் பேசப்பட்டது. இது எந்த அளவுக்கு உண்மையோ தெரியாது. ஆனால் சிவசேனாவினர் அதைச் செய்யக்கூடியவர்கள்தான் என்பதில் மாற்று கருத்தில்லை. அதனால்தான் பாஜக அந்த முயற்சியைக் கைவிட்டதாக அப்போது சொல்லப்பட்டது.

அல்லாட வைக்கும்’காவி’ அடையாளம்

இந்த நிலையில்தான், ‘மகா விகாஷ் அகாடி’ கூட்டணிக்குத் தலைமையேற்கும் முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மதச்சார்பற்ற கொள்கைக்கும், தனது கட்சியின் ‘காவி’ அஜெண்டாவுக்கும் பங்கம் வராத வகையில், கயிற்றில் நடப்பது போன்ற உத்தியைக் கடைப்பிடித்து ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார். சிவசேனா தனது அடிப்படை அடையாளமான ‘காவி’யை கைவிட்டு விட்டது என்ற குற்றச்சாட்டுடன், இந்து வாக்கு வங்கியை பாஜக ஒரேயடியாக வாரி சுருட்டிச் சென்று விடக்கூடாது என்பதற்காக, அவ்வப்போது தனது ‘காவி’ அடையாளத்தையும் தவறாமல் வெளிப்படுத்தி வருகிறார் தாக்கரே.

ஆகஸ்ட் மாதத்தில், அயோத்தியில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய ராமர் கோயில் பூமி பூஜையில் பங்கேற்க உத்தவ் தாக்கரே ரொம்பவே ஆர்வம் காட்டியதை அதற்கு உதாரணமாக சொல்லலாம். அப்போது அவர் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்ற போதிலும், வருகிற நவம்பர் மாதம் அவர் அயோத்தி செல்லலாம் என தாக்கரேவுக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள்.

ஆனால் “அவ்வப்போது இந்துத்துவா அடையாளத்தைக் காட்டி தாக்கரேவால் நீண்ட நாட்களுக்கு பாஜகவுக்கும் ‘செக்’ வைத்துக் கொண்டு, இந்து ஓட்டு வங்கியையும் தக்க வைத்துக் கொள்ள முடியாது. ஒரே நேரத்தில் அவர் இரட்டைக் குதிரையில் சவாரி நினைக்கக் கூடாது. அவர் மகா விகாஸ் அகாடி கூட்டணியின் மதச்சார்பற்ற செயல்திட்டத்துக்கு விசுவாசமாக இருக்க விரும்பினால், இந்துத்துவா குறித்து உதட்டளவில் பேசி வருவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்கிறார் ஒரு காலத்தில் தாக்கரேவுடன் மிகவும் நெருக்கம் காட்டிய பாஜக தலைவர் ஒருவர்.

இருப்பினும் இதை ஆவேசமாக மறுக்கும் சிவசேனாவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், “இந்துத்துவா குறித்து பாஜக எங்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம். அதற்கும் அவசியமும் இல்லை” எனக் கூறுகிறார்.

சீண்டிய ஆளுநர்… சீறிய சிவசேனா

ஆனால் பாஜக விடுவதாக இல்லை. மகா விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து சிவசேனா விலகுவதற்கான எந்த அறிகுறியும் தென்படாததால், இறங்கி அடிக்க முடிவு செய்து விட்ட அக்கட்சி, இந்துத்துவாவை முழுமையாக பின்பற்றுவது தங்கள் கட்சியே என்ற பிம்பத்தை ஏற்படுத்தவும், சிவசேனாவின் ‘காவி’ அடையாளத்தை சிதைக்கவும் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தி வருகிறது. சிவசேனா இந்துத்துவாவுக்கு விரோதமான கட்சி என்ற எண்ணத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெற்றுவிட்டால், மகாராஷ்டிராவின் இந்து ஓட்டு வங்கியை முழுமையாக கைப்பற்றி விடலாம் என பாஜக கருதுகிறது.

அதற்கான நடவடிக்கையின் தொடக்கமாகவே, ” நீங்கள் திடீரென்று ‘மதச்சார்பற்றவராக’ மாறிவிட்டீர்களா..?” என்று கேட்டு, உத்தவ் தாக்கரேவுக்கு மகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரி எழுதிய கடிதம் பார்க்கப்படுகிறது. அவரது இந்த கடித பின்னணியில் பாஜகவின் கண்ணசைவு நிச்சயம் இருந்திருக்கும்.

மகாராஷ்டிராவில் கொரோனா பொதுமுடக்கம் காரணமாக அனைத்து வழிபாட்டுத் தலங்களும் திறப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்தான், “கோயில்கள் திறப்பதைத் தள்ளிப்போட வேண்டும் என எதுவும் அசரீரி கேட்கிறதா? அல்லது திடீரென நீங்கள் மதச்சார்பற்றவராக மாறிவிட்டீர்களா? உங்களுக்கு அந்த வார்த்தையே பிடிக்காதே…” என்று சீண்டும் தொனியில் அந்த கடிதத்தை எழுதியிருந்தார் ஆளுநர் .

அவரது இந்த கடிதத்தினால் ரொம்பவே கொதித்துப் போன உத்தவ் தாக்கரே, “கோயில்களைத் திறப்பது இந்துத்துவா என்றும் அவற்றை திறக்காதது மதச்சார்பின்மை என்றும் நீங்கள் கருதுகிறீர்களா? நீங்கள் ஆளுநராக பதவியேற்ற அரசியலமைப்பு எதற்கானது? மதச்சார்பின்மை என்பது அரசியலமைப்பின் முக்கிய அம்சமாகும். நீங்கள் அரசியலமைப்பைப் பின்பற்றவில்லையா?” என்று காட்டமாக பதில் கடிதம் அனுப்ப, மகாராஷ்டிரா அரசியலில் அனல் தகிக்கிறது.

கூட்டணியில் இடம்பெற்றுள்ள சரத் பவாரும், ஆளுநரின் கடிதத்துக்கு கண்டனம் தெரிவித்து பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ” பயன்படுத்தப்படும் வார்த்தையும் தொனியும் எப்போதும் ஒரு தனிநபர் வகிக்கும் அரசியலமைப்புப் பதவியின் நிலைக்கு ஏற்ப இருக்க வேண்டும்” என்று காட்டமாக குறிப்பிட்டிருந்தார்.

இந்து ஓட்டு வங்கிக்கு குறி

வருகிற 2022 ஆம் ஆண்டு மகாராஷ்டிராவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்ட பாஜக – சிவசேனா, , தற்போது எதிரெதிர் முகாமில் நிற்கின்றன. இந்த நிலையில், இந்த தேர்தல் இவ்விரு கட்சிகளின் இந்துத்துவா செல்வாக்கை தீர்மானிக்கும் மினி தேர்தலாக இருக்கும் என்பதால், உணர்வு பூர்வமான கோவில் பிரச்சனையைக் கிளப்பி, சிவசேனாவின் ஓட்டு வங்கியை சிதைக்க திட்டமிடுகிறது பாஜக.

அதே சமயம் சிவசேனா வசமும் ‘மண்ணின் மைந்தர்’ துருப்பு சீட்டு உள்ளது. மேலும் ஆளுநரின் கடிதம் சிவசேனா தலைமையிலான அரசின் அதிகாரத்தில் தலையிடும் வரம்பு மீறிய செயல் என்று சேனாவை ஆதரிக்கும் மிடில் கிளாஸ் வாக்காளர்கள் கருதுவார்களேயானால், அது நிச்சயம் பாஜகவுக்கு எதிராக திரும்பவும் வாய்ப்பு உள்ளது. கூடவே மதச்சார்பின்மையை விரும்பும் வாக்காளர்களின் ஆதரவும் சேனாவுக்கு ஆதரவாக திரும்ப வாய்ப்புள்ளது. அப்படி ஒரு நிலைமை ஏற்பட்டால், அது நிச்சயம் பாஜகவுக்கு ஆப்பசைத்த குரங்கின் நிலையாகத்தான் போய்விடும்!

About Author

மேகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *